வரும் 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 12, 2019

வரும் 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு


வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்தில் இருந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பு திரும்பப் பெற்றுள்ளது.
திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.


ஜாக்டோ - ஜியோ விவகாரம்

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததால், டிசம்பர் 4-ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்தது.


வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

அரைநாள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4-ம் தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தது. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் வேளை போன்றவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு


இதனையடுத்து இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ஜாக்டோ - ஜியோ விவகாரம் தொடர்பாக இதுவரை தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை  தமிழக அரசின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதனையடுத்து வேலைநிறுத்த போராட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கூறினர். இதனிடையே டிச.10- ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் ஜன.7ம் தேதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.


ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை 

இதையடுத்து .மதுரையில் ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் 2 தினங்களுக்கு முன்பு நடந்தது. இதன்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் அளித்த பேட்டியில், வரும் 22ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. தமிழக அரசு 2 கோரிக்கைகள் குறித்து மட்டுமே நீதிமன்றத்தில் விவாதிக்கிறது. வரும் 11ம் தேதிக்குள் எங்களின் பழைய பென்ஷன் திட்டம் தொடர வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும். இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.21 மாத நிலுவைத்தொகையை  வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர்,  ஊர்ப்புற நூலகர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் இப்படி தொகுப்பூதியத்தில்  பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களை, நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். என்று எச்சரிக்கை விடுத்தனர்.


22ம் தேதி முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம் 

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ திரும்பப் பெற்றது. மேலும் திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என்றும் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து வழக்கை ஜன.28க்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

Post Top Ad