Flash News : ஜாக்டோ-ஜியோ - 17(b) பெற மறுப்பவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவு - சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 26, 2019

Flash News : ஜாக்டோ-ஜியோ - 17(b) பெற மறுப்பவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட உத்தரவு - சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை




பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இதேபோல் தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்தது.

அதன் பின்பும் போராட்டம் நீடிப்பதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைக்கு வராமல் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கைதான முக்கிய நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


சென்னை எழிலகத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களில் 5 பெண்கள் உள்பட 41 பேர் மட்டும் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறி மாஜிஸ்திரேட்டு ஜாமீனில் விடுதலை செய்தார்.

செங்கல்பட்டில் 20 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில் 30 பேர், சேலம் நாமக்கல்லில் 97பேர், வேலூர், திருவண்ணாமலையில் 13 பேர், கோவையில் 16 பேர், நாகர்கோவிலில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


நாகர்கோவிலில் கைதானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 188, 341, 353, 7(1)ஏ சி.எல்.ஏ. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் பல நகரங்களில் கைதானவர்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இதை வாங்க மறுத்ததால் அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்தப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முழு விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில் அவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை பாய்கிறது.

முதல் கட்டமாக ‘நோ ஒர்க் நோ பே’ அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு வராத நாட்களுக்கு அவர்களுக்கு சம்பளம் கிடையாது.

அடுத்த கட்டமாக ஒழுங்கு நடவடிக்கையும், தொடர்ந்து சஸ்பெண்டு நடவடிக்கையும் பாய்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

25-ந்தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.


இதை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்துவது மிகப்பெரிய பணியாகும். நீங்கள் தனிக்கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளும் எந்தத்தடையும் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

இதுபோல் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Post Top Ad