நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 18, 2018

நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மார்கழி மாதம் பிறந்ததையொட்டி நேற்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் முதலமைச்சரும் துணை முதல் அமைச்சரும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.டெல்டா  மாவட்டங்கள் புயலால் பாதித்த போது அரசு மேற்கொண்ட பணிகளை தமிழகமே பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்  ஒரு வார காலம் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதன் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


புயலால் பாதிக்கப்பட்ட  டெல்டா மாவட்டங்களில் நீட் தேர்வை பொறுத்தவரை  பயிற்சிகளுக்காக கால அவகாசம் தரப்பட்டிருந்தது. அதனால் அனைத்து  பள்ளிகளிலும் நீட் பயிற்சிகளில் மாணவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். நீட்  தேர்வுகளில் பங்கு  பெற டெல்டா மாணவர்களுக்கு எந்த ஒரு தங்கு தடையும் இல்லை. பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  பள்ளி மாணவர்களுக்காக வழங்க இருந்த 14 வகையான இலவச திட்டங்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வருகிற ஜனவரி மாதம் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்சுத்தம் மற்றும் பொதுஅறிவை வளர்க்கும்  வகையிலும், மாணவர்களின் குணநலன்களை மேம்படுத்தும் வகையில் நீதிபோதனை  வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.  பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமைச்சர் செங்கோட்டையன் - விஜயேந்திரர் சந்திப்பு நடைபெற்றது

Post Top Ad