புயல் நிவாரணப் பணிகளில் ஆசிரியர்களின் பங்கு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 2, 2018

புயல் நிவாரணப் பணிகளில் ஆசிரியர்களின் பங்கு

புயல் நிவாரணப் பணிகளில் ஆசிரியர்களின் பங்கு :





மணிமாறன்
திருவாரூர்.
9952541540.

நாங்கள் நிவாரணப் பணிக்காக தெரிவு செய்த பகுதிகள் முழுமையாக நம் ஆசிரியர்களின் மேற்கோள்களில் தான். பயணத்தின் போது செல்லும் வழிகள் தோறும் பிஸ்கட் ,சால்வைகள் மற்றும் மெழுகுவர்த்திகள் தருவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

குக்கிராமங்களில் செல்லும் போதும் மக்கள் எங்க சார் வந்து மெழுகுவர்த்திகள், கொசுவர்த்தி, பசங்களுக்கு பிஸ்கட்லாம் தருவாங்க என்று நெகிழ்ச்சி உடன் தெரிவிக்கும் போதும், எந்த அமைப்பு என்றவுடன் ஆசிரியர் என்றவுடன் கிடைக்கும் ஒரு பாசமும் கண்டிப்பாக பெருமையுடன் சொல்ல வேண்டும்.

பள்ளிக்குழந்தைகளுடன் முகாமிலேயே தங்கிய ஆசிரியர், பள்ளிகளை சுத்தப்படுத்தியவர்கள், தங்களது வீடுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று தங்க வைத்தவர்கள் என்று பட்டியல் நீளும்...

சில சம்பங்களை இங்கு பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

சம்பவம்: 01

ஒரு ஆசிரியர் அவரது வீட்டில் தினமும் உணவு சமைத்து பொட்டலங்களாக கட்டிக் கொண்டு அவரது வாகனத்தில் வைத்துக் கொண்டு எதோ ஒரு திசையில் பயணித்து பாதிப்படைந்த மக்களுக்கு அந்த 100 பொட்டலங்களை கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்புகிறார். திரும்பும் போது மாலைக்கான உணவுப் பொட்டலம் தயார். அதையும் எடுத்துக் கொண்டு மாலை நேர பயணம் இன்று வரை அவரால் 200 பேர் 17 ஆம் தேதி முதல் உணவு உண்கின்றனர்.

சம்பவம்: 02


கல்வித்துறையால் தண்டிக்கப்பட்டு அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர் ஒருவரைத் தான் சுற்றி உள்ள கிராமங்களே கொண்டாடுகிறது. தமது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தினமும் மாலையில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, உணவு, தண்ணீர் என அனைத்தையும் சுமார் 20 கிராமங்களுக்கு செய்துள்ளார். தற்போது அடுத்த நிலைக்காக வீடு கட்டித் தருதல் , சோலார் விளக்கு போன்ற பணிகளில் ஈடுபடுவதோடு, இயற்கையான மரங்கள் குறித்தும், கோடியக்கரை புணரமைப்பு பற்றியும் நம்மோடு பேசி வருகிறார். ஆசிரியர் தோழர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

சம்பவம்: 03

நிவாரணப் பொருட்களுடன் செல்லும் எங்களை வரவேற்பதில் துவங்கி, உரத்த குரலில் பெயர்களை வாசிக்கின்றார். பெரிய அளவு கொண்ட குறிப்பேட்டில் குடும்பங்களின் பெயர்களுக்கு குறி இடுகிறார். அடுத்த பக்கத்தில் வயதானவர்கள் list, குழந்தைகள் list என வைத்துக் கொண்டு அவர்களுக்கான உதவியை தனியாக பிரித்து வழங்குகிறார். உணவு சமைக்க பொருட்களை மேற்பார்வை இட்டு வழங்குகிறார்.


சம்பவம்: 04

பெண் ஆசிரியர்கள் குறித்து பதிவிடல் வேண்டும். பேருந்து, மின்வசதி இல்லை என்றாலும் எப்படியோ பயணம் செய்து வழக்கமான உற்சாகத்துடன் களத்தில் உதவுகின்றனர். என்ன பள்ளி தான் விடுமுறை ஆனால் இவர்களது பணிகளுக்கு விடுமுறை இல்லை. சமையலில் உதவிடுகிறார்கள், நகரத்திற்குச் சென்று தேவையான பொருட்களை வாங்குகின்றனர்.

சம்பவம் : 05

தமது நண்பர்களின் மூலமாக திரட்டிய பொருட்கள், நிதி இவற்றைக் கொண்டு அவர்களது பணிப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் உதவுகின்றனர். வெளியில் இருந்து செல்லும் அனைவருக்கும் வழிகாட்டுகின்றனர்.

பேனரை வைத்துக் கொண்டு உதவிடுதல், தன்னுடைய பகுதிக்கு முக்கியத்துவம் - போன்ற சில குறைபாடுகள் இருப்பினும் ஒட்டுமொத்த மாகவே மகத்தான பணிகளில் ஆசிரியர்கள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது இப்பேரிடரில் பெரிய அளவில் பொது சமூகத்தின் மீது ஆசிரியர்களுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளது உண்மை.

அதனால் தான் அவர்கள் தற்போதும் களத்தில் மக்களுக்கான வீடு கட்டுதல், கீற்று வாங்கி தருதலிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவை புயல்பாதித்த இடங்களில் உள்ள ஆசிரியர்கள் பற்றிய பதிவு மட்டுமே..வெளியில் உள்ள ஆசிரியர்களின் பணி இன்னும் சிறப்பு.

பெருமை கொள்வோம் ஆசிரியராய் & மீட்டெடுப்போம் நம் மீதான சமூகத்தின் மதிப்பினை.

மகிழ்ச்சியும் நன்றியும். ஆசிரியராக பெருமை கொள்கிறேன்.
நன்றி.

Post Top Ad