எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் கல்வி உதவித்தொகை: இரண்டு மாத காலத்துக்குள் வழங்க உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 10, 2018

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் கல்வி உதவித்தொகை: இரண்டு மாத காலத்துக்குள் வழங்க உத்தரவு





எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித் தொகையை இரண்டு மாத காலத்துக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவில், ஆண்டுதோறும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. எனவே, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் பாதுகாப்புத்துறை, தமிழக அரசு மூலம் இந்த உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,546 கோடியை வழங்கவில்லை. அந்த தொகையை வழங்கக் கோரி தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறினார். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகைக்காக கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய நிதி அமைச்சகத்திடம், சமூகநீதித் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த 2016-2017 கல்வி ஆண்டுக்கான நிதி ரூ.822.91 கோடி, மற்றும் 2017-2018 கல்வி ஆண்டுக்கான நிதி ரூ.162 கோடியையும் மத்திய சமூகநீதி மற்றும் பாதுகாப்புத்துறை இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். இந்த உதவித்தொகையை தமிழக அரசு, மாணவர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Post Top Ad