அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: ஜாக்டோ-ஜியோ சங்கத்துக்கு முதல்வர் கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 2, 2018

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: ஜாக்டோ-ஜியோ சங்கத்துக்கு முதல்வர் கோரிக்கை





கஜா புயல் நிவாரண பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இக்கூட்டமைப்பினரை சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து, அதன் விவரத்தை எனக்கு தெரிவிக்க அறிவுறுத்தியிருந்தேன். அதன்படி, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு அமைச்சர், உயர் அலுவலர்களும் கடந்த 30ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.


கூட்டத்தில், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை, குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், 1.1.2016 முதல் 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்குதல், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், எடுத்து வரும் நடவடிக்கைகளை தெளிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு அறிக்கை தற்போதுதான் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், இக்குழுவின் அறிக்கையை அரசு பரிசீலனை செய்து, உரிய முடிவெடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை விவரங்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை எவ்வித பாகுபாடும் இல்லாமல் பரிசீலனை செய்து அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு கடுமையான நிதிச்சுமை இருந்தபோதிலும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

ஊதிய உயர்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் பெற்று அதனை விரைவில் அமல்படுத்தியுள்ளது. அண்மையில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில், அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இத்தகைய தருணத்தில், புயலால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய விவசாய பெருமக்கள், மீனவ பெருமக்கள், பொதுமக்கள் ஆகியவர்களின் துயர் துடைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு தொய்வு ஏற்படாமல், விரைவாக பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.


மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அளித்துள்ள கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, செயல்படுத்த வாய்ப்புள்ள கோரிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு முழு முயற்சி எடுத்து வரும் காலகட்டத்தில், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Post Top Ad