குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 11, 2018

குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்!

சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விடுவார்கள். சித்த மருத்துவத்தின் அடிப்படை, நோயைக் குணமாக்குவது மட்டுமன்று.

குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்!

இன்றுதான் குழந்தை மெள்ளச் சிணுங்கினால்கூட மருத்துவர்களிடம் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் பதற்றமே இல்லாமல், வீட்டில் இருக்கும் சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் சின்னச் சின்னப் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விடுவார்கள். சித்த மருத்துவத்தின் அடிப்படை, நோயைக் குணமாக்குவது மட்டுமன்று. நோய் வராமல் தடுப்பது. உணவையே மருந்தாக்குவது. 

தாய்ப்பால் குழந்தைக்கு முதல் உணவு மட்டுமல்ல... முதல் மருந்தும் அதுதான். குழந்தைக்கு ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை. தாய்ப்பால் குழந்தைகளுக்கு வெறும் போஷாக்கு மட்டும் தருவதில்லை. நோய்களைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. இதன் சக்தியை பசும்பாலிலிருந்தோ, பவுடர் பாலிலிருந்தோ பெற முடியாது. 


சில பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். அல்லது சுரக்காமலேகூட போக வாய்ப்புள்ளது. உணவில் சிறிது கரிசனம் காட்டினால் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடலாம்.  வெந்தயம், சோம்பு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு மேம்படும். அத்துடன் வெந்தயக் கஞ்சி, உளுந்தங்களி, பூண்டுக் குழம்பு ஆகியவையும் தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். சித்த மருந்தான தண்ணீர்விட்டான் கிழங்கு மூலம் செய்யப்பட்ட சதாவரி லேகியத்தைச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரப்பு அதிகரிக்கும். 


குழந்தைக்கு ஆறு மாதத்துக்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே போதாது; கூடுதலாக புதிய இணை உணவுகளையும் தரவேண்டும். குழந்தை வளர வளர அவர்களது உணவுத் தேடலும் அதிகரிக்கும். எனவே, முதலில் கஞ்சிகளை அறிமுகம் செய்ய வேண்டும். அரிசி,கேழ்வரகு, நேந்திரம் பழ மாவுக் கஞ்சி எனக் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் குழைத்த சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ கொடுத்துப் பழக்க வேண்டும். முதலில் கொடுக்கும்போது லேசாக வயிற்றுக்கழிச்சலோ அல்லது வயிற்றுவலியோ ஏற்படும். அதைக்கண்டு பதற வேண்டியதில்லை.  


ஒரு வயதுக்குப் பிறகு சிறிது சிறிதாக நறுக்கிய காய்கறிகளில் செய்த சூப் வகைகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் சாப்பிடும் உணவில் மஞ்சள் மற்றும் மிளகுப் பொடி சேர்த்துக் கொள்வது எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவும். `என் குழந்தை எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை' என்று வருத்தப்படாமல் உணவின்மீதான ஈடுபாட்டை ஏற்படுத்த பெற்றோர் முயலவேண்டும். நீங்கள் அவர்கள் உணவின்மீது செலவிடும் கூடுதல் சில மணிநேரங்கள் அவர்களது வாழ்நாளில் சில ஆண்டுகளைப் பெற்றுத் தருவதற்குச் சமமானது.

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, மீனை வேகவைத்துக் கொடுக்கலாம். சிலர் மீன்களில் அமிலத்தன்மை இருப்பதாகக் கூறி குழந்தைகளுக்குக் கொடுக்க யோசிக்கிறார்கள். நம் ஊரில் ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அமிலத்தன்மை மற்றும் பாதரசத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தாராளமாகக் கடல் மீன்களைச் சாப்பிடக் கொடுக்கலாம்.


பிள்ளைப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஒரு மருந்துப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்தச் செய்தி பலரையும்போய்ச் சென்றடையவில்லை. அந்தப் பெட்டகத்தில் பிள்ளைப்பேறு அடைந்த காலத்தில் தொடங்கி குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை கொடுக்க வேண்டிய மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும். 
குழந்தைகளுக்குத் தொடக்கத்திலிருந்தே வெளி விளையாட்டுகளின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நமது மரபு விளையாட்டுகளைக் கற்றுக் கொடுப்பது நல்லது. 


குழந்தைகளின் நலம் காக்கும் மூலிகைகள்!
*காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
*இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
*சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
*நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
*ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
*மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
*வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
*வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
*கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
*பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
*பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
*சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
*நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
*வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
*கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
*உடல் உறுதிபெற செவ்வாழைப்  பழம்.
*பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி 
*குளியலுக்கு நலுங்குமாவு.


நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் மட்டுமல்ல. இக்காலக் குழந்தைகள் வாழ்விலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தகுந்த ஆரோக்கியமான வாழ்வைத் தர வேண்டியது நமது கடமையாகும்.  

Post Top Ad