ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மேலும் ஒரு முறைகேடு குறைத்துக் காட்டப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை: தேர்வர்கள் குற்றச்சாட்டு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 16, 2018

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மேலும் ஒரு முறைகேடு குறைத்துக் காட்டப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை: தேர்வர்கள் குற்றச்சாட்டு



உயர்நிலைப்பள்ளிகளில் 295 வேதியியல் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை டிஆர்பி நிர்வாகம் திட்டமிட்டு குறைத்துக் காட்டுவதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான 387 வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்தேர்வு செய்வதற்கான அறிவிக்கை 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

முதுகலை வேதியியல், பி.எட்  படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்காக எழுத்துத்தேர்வு 2017ம் ஆண்டு நடந்தது. தேர்வு நடந்து ஒரு வார காலத்துக்குபின், தற்காலிக விடைக்கையேடு வெளியிடப்பட்டது. அதில் 6 கேள்விகள் தவறாக உள்ளது  தொடர்பாக தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்திடம் ஆட்சேபனை தெரிவித்தனர். 


குறிப்பிட்ட கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க டிஆர்பி நிர்வாகம் மறுத்த நிலையில், தென் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை  நடந்து வந்தபோதே, சமுதாய பிரிவு வாரியாக மதிப்பெண் தகுதி பெற்ற, 92 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்த விசாரணையில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது உறுதியானது. அதற்கு உரிய மதிப்பெண் வழங்குவதாக டிஆர்பி அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து  குறிப்பிட்ட 6 தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் டிஆர்பிக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தில் முறையிடுமாறும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக குறிப்பிட்ட தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தை தொடர்புகொண்டபோது, குறிப்பிட்ட வழக்கில் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்த தேர்வர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்க முடியும் என்று அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 


அனைத்து காலிப்பணியிடங்களும் நிரம்பிவிட்டதாக டிஆர்பி தேர்வர்களுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளது. வெறும் 92 இடங்கள் மட்டுமே நிரப்பிவிட்டு, மீதமுள்ள 295  இடங்களை காலிப்பணியிடங்கள் பட்டியலில் டிஆர்பி  நிர்வாகம் காட்டவில்லை.

இதனால் தங்களுக்கான பணியிடங்களை வேறு நபர்களுக்கு டிஆர்பி அதிகாரிகள் முறைகேடாக விற்பனை செய்திருக்கலாம் என தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்கனவே பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட தேர்வு சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டதோடு, அதுதொடர்பாக  விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்வாணையத்தின் விடை கையேடு இறுதியானதா?
ஆசிரியர் தேர்வு வாரியத்தை போல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் தேர்வு முடிந்ததும், தற்காலிக விடைக்கையேடு வெளியிட்டு, ஆட்சேபனைகளை பெற்று இறுதி விடைக் கையேடு வெளியிடுகிறது. அதற்கு இணையதளம் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வாணையத்தின் 2வது விடைக்கையேடே இறுதியானது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Post Top Ad