சொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்டிக் தடை! பசுமை வளாகங்களாக மாறுவதில் ஆர்வம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 31, 2018

சொல்லியடிக்கும் கோவை பள்ளிகள் பாடம் ஒன்று; பிளாஸ்டிக் தடை! பசுமை வளாகங்களாக மாறுவதில் ஆர்வம்





நாளை முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, கோவை பள்ளிகளில் இதற்கான விழிப்புணர்வு மட்டுமல்ல, அமலும் நடைமுறைக்கு வந்து விட்டது!
மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள், பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால், சமீபகாலமாக கோவையின் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகள் குளங்களை சுத்தப்படுத்தினால், ஓரிரு நாட்களிலே அப்பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை மீண்டும், ஆக்கிரமித்து விடுகிறது. இயற்கையை நோக்கி மீண்டும் திரும்புவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.
நாளை முதல் பிளாஸ்டிக்பயன்பாட்டுக்கு, தடை விதித்து அத்தனை பிரச்னைகளுக்கும், முற்றுப்புள்ளி வைத்துள்ளது தமிழக அரசு. பள்ளிகளில் இந்த உத்தரவை, கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டுமென, இயக்குனர் ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டார். அன்று முதலே கோவையில் உள்ள பல பள்ளிகளில், உத்தரவு அமலுக்கு வரத்துவங்கி விட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண் ணன் அறிவுறுத்தலின்படி கோவை பள்ளிகள் பசுமை வளாகங்களாக மாறி வருகின்றன.

எங்கள் பள்ளி, கடந்த இரு ஆண்டுகளாக துாய்மைப்பள்ளிக்கான விருது பெற்றுள்ளது. வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதில்லை. மாணவர்கள் வைத்திருக்கும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களிலும், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பாலன், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, குரும்பபாளையம்


எங்கள் பள்ளி மாணவர்களுக்கு, சில்வர் டிபன் பாக்ஸ் வாங்கி கொடுத்துள்ளேன். சில்வர் குடிநீர் பாட்டில் வாங்க, தன்னார்வலர்கள் உதவியை கோரியுள்ளேன். பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்வதோடு, மரக்கன்றுகள் வளர்க்கும் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மரக்கன்றை முறையாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு, பரிசளிக்க முடிவெடுத்துள்ளோம்.ஸதி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மலுமிச்சம்பட்டி


பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எடுத்துரைத்துள்ளோம். வகுப்புதோறும் மாணவர் தலைவர், இதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பயன்பாட்டுக்கு கூட பிளாஸ்டிக் கேன், டம்ளர்கள் பயன்படுத்துவதில்லை. மாணவர்களை கட்டாயப்படுத்தாமல், தடை உத்தரவின் பயன்களை எடுத்துரைத்தால், நிச்சயம் பின்பற்றுவார்கள்.கோவிந்தராஜ், தலைமையாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்துார்


பிளாஸ்டிக்கை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, பள்ளியில் வீடியோ திரையிட்டு விளக்கியுள்ளோம். பேப்பர் பைகள் தயாரிப்பதற்கான, பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளோம். ஆசிரியர்களும் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதில்லை என, உறுதிமொழி எடுத்துள்ளோம். உடனடியாக இம்மாற்றங்களை அமல்படுத்த முடியாவிடிலும், வெகு விரைவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை, முற்றிலும் தவிர்க்க முடியும்.சக்திவேல், இடைநிலை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம்.

Post Top Ad