வீட்டுப்பாடம் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை!' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 13, 2018

வீட்டுப்பாடம் இல்லை; புத்தகப்பையைச் சுமப்பதில்லை!' - அரசுப் பள்ளியில் அசத்தல் முயற்சிகள்

பள்ளியிலேயே வீட்டுப்பாடம், புத்தக்கப்பையைச் சுமக்கத் தேவையில்லை எனச் சிறப்பான பல முயற்சிகள் செயல்படுத்தப்படுகிறது, நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில். அவை குறித்து உற்சாகமாகப் பேசுகிறார், தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி.

``தினமும் புத்தகப்பையைக் கொண்டுவந்து, கொண்டுசெல்வதில் மாணவர்களுக்குச் சிரமங்கள் இருக்கிறது. வீட்டுப்பாடம் செய்வதிலும் மாணவர்கள் கவனம் செலுத்துவதில்லை. எங்கள் பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் அன்றாட வீட்டுப் பாடங்களை பள்ளியிலேயே முடித்துவிடுவார்கள். 


பிறகு தங்கள் புத்தகப்பையை வகுப்பறையிலேயே வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் புத்தகப்பையை வீட்டுக்கு எடுத்துச் சென்று, திங்கட்கிழமை கொண்டுவந்துவிடுவார்கள். கடந்த ஒருமாதமாக இந்த முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறோம். இதனால் படிப்பை மாணவர்கள் சிரமமாக நினைப்பதில்லை. பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி. 

அரையாண்டுத்தேர்வு முடிந்து ஜனவரி மாதத் தொடக்கத்தில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அப்போது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் எல்லோரும் புத்தகப்பையை வீட்டுக்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்று நடைமுறைப்படுத்த இருக்கிறேன்" என்கிறார்.

பள்ளியில் செயல்படுத்தப்படும் பிற வித்தியாசமான முயற்சிகள் குறித்துப் பேசும் சத்தியமூர்த்தி, ``2005-ம் ஆண்டு நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். அப்போது பணியாற்றிய பள்ளியில், எந்தப் பாடநேரம் மற்றும் இடைவேளைக்கும் பெல் அடிக்கக்கூடாது என முடிவெடுத்து, செயல்படுத்தினேன். அதேபோல தற்போது பணியாற்றும் பள்ளியில் 2013-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தேன். 


அப்போதிலிருந்து இப்பள்ளியிலும் பெல் அடிப்பதில்லை. அதன்படி எங்கள் பள்ளியில், காலைநேரம் வழிபாட்டுக்கூட்டப் பாடல் ஒலித்ததுமே மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். பிறகு வகுப்பு  நடந்துகொண்டிருக்கும்போது, தண்ணீர் குடிக்க, யூரின் கழிக்க என அடிப்படைத் தேவைகளுக்கு மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.


அந்தச் சுதந்திரத்தை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதைக் கண்காணிப்போம். மேலும், மதியம் ஒருமணிக்கு ஒலிபெருக்கி மூலம் எஃப்.எம் செய்தியை ஒலிபரப்புவோம். மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டே மாணவர்களும், அருகிலுள்ள கிராம மக்களும் செய்தியைக் கேட்பார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் அரசின் சார்பில் நான்கு ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டிருக்கிறது. 


வாரப் பள்ளி நாள்களில், ஒருநாள் அழுக்குச் சீருடை அணிந்துவருவதைப் பல மாணவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அதனால், புதன்கிழமை தோறும் மாணவர்கள் நீல நிற ஆடைகளை அணிந்துவர ஏற்பாடு செய்திருக்கிறோம். இதனால் ஐந்து நாளும் மாணவர்கள் தூய்மையான ஆடைகளை அணிந்துவருகிறார்கள்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

Post Top Ad