பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் குறைப்பு: தேர்வுத்துறை அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 28, 2018

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் குறைப்பு: தேர்வுத்துறை அறிவிப்பு



பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரங்களில் மாற்றங்களை செய்தும், நேரத்தை குறைத்தும் புதிய தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பத்தாம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடப்பது வழக்கம். பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் மாதமும், பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் மாதமும் தேர்வுகள் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு முதல் மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒரே நேரத்தில் தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 


இதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்பு தேர்வுகள் மார்ச் 6ம் தேதி தொடங்கி, 22ம் தேதி முடிகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கின்றன. ஏப்ரல் மாதம் தேர்வுகள் ஏதும் இல்லை. 

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வில் இந்த ஆண்டு முதல் மொழிப்பாடங்களுக்கு ஒரே தாள்தான். பத்தாம் வகுப்புக்கு மட்டும் மொழிப்பாடத் தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தலா இரண்டு தாள்கள் உள்ளன. இதன் காரணமாக தேர்வு எழுதும் நேரத்தையும் குறைத்துள்ளனர். மேனிலை வகுப்பு தேர்வுகளுக்கு கடந்த ஆண்டு வரை தேர்வு நேரம் 3 மணி  நேரம் ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த நேரம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.


*  தேர்வுகள் நடக்கும் நாட்களில் காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் மாணவர்கள் வந்ததும், அவர்களுக்கு 10 நிமிடம் கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் குறிப்புகள் எழுத 5 நிமிட நேரமும் என 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

*  பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளை பொறுத்தவரையில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை 10.15 முதல் மதியம் 12.45 வரையும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோருக்கு 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும் தேர்வு நடக்கும். 

* மேனிலை வகுப்புகளுக்கு மொழிப்பாடத் தேர்வுகள் மேற்கண்ட நேர அளவீடுகளின்படி காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். 


* பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் மற்ற பாடங்களை பொறுத்தவரையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவோர் 10.00 மணி முதல் மதியம் 12.45 வரையும், பழைய பாடத்திட்டத்தில் எழுதுவோர் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையும் தேர்வு எழுத வேண்டும். 

*  பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதுவோர் அனைத்து பாடத் தேர்வுகளையும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 வரை எழுத வேண்டும். 

* பத்தாம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்கள் மட்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு முடியும். மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12.45க்கு முடியும்.

Post Top Ad