24.12.18 அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை விடுமுறைகள்" என்ற கட்டுரைக்கு )தினமணி ஆசிரியருக்கு பதில்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 26, 2018

24.12.18 அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை விடுமுறைகள்" என்ற கட்டுரைக்கு )தினமணி ஆசிரியருக்கு பதில்!!



அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,



24.12.18 அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை விடுமுறைகள்" கட்டுரை வாசித்தேன். அது குறித்து அடிப்படையான சில உண்மைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இந்த உண்மைகளை கட்டுரையாளர் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் பத்திரிகை செய்தி ஆசிரியருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.


# 2019 தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு விடுமுறை பட்டியலில் 22 விடுமுறைகளில் 5 நாட்கள் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அமைகிறது. இந்த ஆண்டு இது குறைவு

# அதே போல மத விடுப்புகள் பெரும்பாலும் பண்டிகை அரசு விடுமுறை நாட்களிலோ சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அமைகின்றன.

# ஈட்டிய விடுப்பு அரசு ஊழியர்களுக்கு தான் 30 நாட்கள். ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் தான். இந்த விடுப்பை துய்க்காமல் ஒப்படைத்தால் பணப்பயன்கள் உண்டு என்கிற காரணத்தால் 90 சதவீத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த விடுப்பை துய்ப்பதில்லை. சேமிக்கவே விரும்புவார்கள். இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை.

. # 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் 1 நாள் ஈட்டிய விடுப்பு குறையும். 28 நாட்களுக்கு மேல் தாண்டினால் மருத்துவர் போர்டு மற்றும் மாவட்ட உயர் அதிகாரியின் அனுமதி பெற்று தான் மீண்டும் பணியில் சேர முடியும். மருத்துவ விடுப்புகளால் பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு, பணி வரன்முறை போன்ற தனிப்பட்ட பாதிப்புகள் இருப்பதால் மருத்துவ விடுப்பு மிக அவசியமானால் மட்டுமே துய்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தாலே அதில் 4 நாட்கள் வார விடுமுறையாகும்.
# உள்ளூர் விடுமுறைகள் அனைத்தும் சனிக்கிழ மைகளில் ஈடு செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.

# அரசு தலைவர்கள் இறப்பின் போது விடப்படும் விடுமுறை பாதுகாப்பு கருதியே. ஓய்வு எடுக்க அல்ல.

# தொடக்கப் பள்ளிகள் 220 பணி நாட்கள் , மேல்நிலைப் பள்ளிகள் 210 பணி நாட்கள், கல்லூரிகள் 180 பணி நாட்களுக்கும் குறையாமல் பணியாற்ற வேண்டும் என்பது அரசு விதி. மற்ற அரசு அலுவலகங்கள் இதை விட அதிக நாட்களே செயல்படுகின்றன.யாரும் மீற முடியாது.இது வருகைப்பதிவேட்டை பார்த்தாலே தெரியும். இப்படியிருக்கையில் 174 நாட்கள் தான் பணி நாட்கள் என்று கட்டுரையாளர் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

# காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை ஆகியவை மாணவர்கள் மனநலம், கற்கும் திறன்,சோர்வு,உடல்நலன் ஆகியவற்றை யோசித்தே கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் சிபாரிசு செய்யப்படுகிறது . இந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை ஊதியம் பெறாமல் பணியாற்ற தயாரா எனக்கேட்கின்றார் கட்டுரையாளர். இந்த விடுமுறைக்கு மட்டும் வேறு வேலை தேட முடியுமா?

# தேர்தல் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற சாதாரண விஷயம் கூட கட்டுரையாளருக்கு நினைவுக்கு வரவில்லை.

# சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டிய கட்டுரையாளர் இந்தியா ஒரு மதசார்பற்ற, நல்லிணக்கம் காட்டும் பல்வகை கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதை மறந்துவிடக்கூடாது. இங்கே அனைத்து வகையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது.

# அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகளால் அரசுக்கு எவ்வித நஷ்டமுமில்லை

# பல வகை விடுப்புகள் இருந்தாலும் விடுப்பு அனுமதி கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் காவல்துறை நண்பர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்கின்றோம்.

# விடுப்பு இருந்தும் அதிகாரிகள் /தலைமை ஆசிரிய்ர்கள் அலுவலக நலன் கருதி அனுமதி தராததால் அதை அனுபவிக்க முடியாதவர்கள் ஏராளம்.

# பெரும்பாலானவை ஈராசிரியர் பள்ளிகளாகவே இருப்பதால் விடுப்பு இருந்தாலும் தேவைப்படும்போது துய்க்க முடியாதவர்கள் ஏராளம்.

# கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு சனி ஞாயிறு விடுமுறை இரவு பகல் என்பதே கிடையாது. மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

# தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு வீட்டுக்கு செல்லாமல் பணியாற்றும் காவல்துறையினர், போக்குவரத்துக்கு ஊழியர்கள் இவருடைய கண்களுக்கு புலப்படவில்லை போலும்.

# சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் ஊழியர்கள், ஆண்டு முழுவதும் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள், மின்சார ஊழியர்கள்..இவர்களை பார்த்த பின்பும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்புவதை என்னவென்பது.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது

ஒரு தரமான நாளிதழ் இதை போல எடுத்தேன் கவிழ்த்தேன் ரக கட்டுரைகளை பிரசுரிப்பது அழகல்ல.

Post Top Ad