கல்லுாரி அங்கீகாரத்திற்கு காத்திருக்கலாமே!' - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 25, 2018

கல்லுாரி அங்கீகாரத்திற்கு காத்திருக்கலாமே!'





மதுரை காமராஜ் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், 'துணைவேந்தர் பொறுப்பேற்ற பின், புதிய கல்லுாரி மற்றும் பாடத்திட்டம் இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
'துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ளோர், டிச., 14க்குள் விண்ணப்பிக்கலாம்' என, நாகேஸ்வரன் தலைமையிலான புதிய தேடல் குழு, நேற்று அறிவித்தது. டிசம்பருக்குள் புதிய துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், 'புதிய கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகாரம், கல்லுாரிகளில் புதிய பாடங்களுக்கான இணைப்பு அங்கீகாரம், டெண்டர் வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை, புதிய துணைவேந்தர் வருவதற்குள் முடித்து விடலாம்' என 'கடமை உணர்வுள்ள' சில அதிகாரிகள், 'துரித' நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்லுாரி, பாடத்திட்டம் அனுமதி வழங்குவது தொடர்பாக, கல்லுாரிகளை ஆய்வு செய்ய, 30க்கும் மேற்பட்ட குழுக்கள், மாஜி துணைவேந்தர், செல்லத்துரையால் நியமிக்கப்பட்டன.

பல்கலை உயர் பதவிகளிலும், அவர் நியமித்தவர்களே உள்ளனர். குழுக்களில் அனுபவம் இல்லாத, ஜூனியர் ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளதாக, குற்றச்சாட்டு உள்ளது.டிசம்பருக்குள் துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, 2018 -19 கல்வி ஆண்டுக்கு புதிய அங்கீகாரம், பாடத்திட்டம் இணைப்பு கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களை, புதிய துணைவேந்தர் பரிசீலிக்க வேண்டும். ஜூன், 16ல் தான் கல்லுாரிகள் துவங்கும். அதற்குள், புதிய துணைவேந்தரால், தகுதியுள்ள கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்கி விட முடியும்.அதுவரை இதுபோன்ற அனுமதிகள், கொள்கை முடிவுகளை, இடைக்கால கன்வீனர் கமிட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் முன்பு போல முறைகேடுகள், ஊழல்கள் நடக்காமல் பல்கலை பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad