வங்கி கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக ஊழியரின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 20, 2018

வங்கி கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக ஊழியரின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்




வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பதற்காக ஊழியரின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை துறைமுகத்தில் பணியாற்றி வருபவர் ரமேஷ் புராலே. மத்திய அரசு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் மானியம் உட்பட அரசின் நலத்திட்டங்களை பெறவே வங்கிக் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுவதாக கருதப்பட்டது.


ஆனால் மும்பை துறைமுகத்தில் பணியாற்றி வரும் ரமேஷ் புராலே தனது ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்க மறுத்துவிட்டார். 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ரமேஷ் புராலேக்கு இது தொடர்பாக எச்சரிக்கை கடிதமும் கொடுத்திருந்தது. ஆனால் எனது தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படும் என்பதால் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது என்று ரமேஷ் புராலே கூறிவிட்டார். இதனால், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அவருக்கு துறைமுக நிர்வாகம் சம்பளத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தவில்லை. இதையடுத்து, ரமேஷ் புராலே இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நிலுவையில் இருந்தது.



இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் ஆதார் விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவில் வங்கிக்கணக்கிற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்து இருந்தது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி மீண்டும் ரமேஷ் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இம்மனு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா, எஸ்.கே.ஷிண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘‘ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்கவில்லை என்பதற்காக மனுதாரரின் சம்பளத்தை நிறுத்தி வைக்கக்கூடாது’’ என்று தெரிவித்தனர்.


‘‘ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்கவில்லை என்பதற்காக ஊழியரின் சம்பளத்தை எப்படி கொடுக்காமல் இருக்கலாம்?’’ என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘‘சுப்ரீம் கோர்ட் இவ்விவகாரத்தில் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் ஆதார் எண்ணை வங்கிக்கணக்கோடு இணைக்கவில்லை என்பதற்காக சம்பளத்தை நிறுத்தி வைக்க முடியாது’’ என்று தெரிவித்தனர். அதோடு மனுதாரருக்கு சம்பள நிலுவை தொகையை உடனே வழங்க உத்தரவிட்டதோடு இவ்வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 8ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Post Top Ad