இன்னும் எட்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்: வானிலை ஆர்வலர் செல்வகுமார் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 17, 2018

இன்னும் எட்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்: வானிலை ஆர்வலர் செல்வகுமார் தகவல்






வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகும், எட்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள், தமிழகத்தை நோக்கி நகர்ந்து, மழை தர வாய்ப்புள்ளது,'' என, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, வானிலை ஆர்வலர், செல்வகுமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி:தமிழகத்தை கடந்துள்ள, 'கஜா' புயல், அதிகபட்சமாக, 165 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றை வீசியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், விவசாயி ஒருவருக்கு சொந்தமான, ஒரு டன் எடையுள்ள கூடாரத்தை, பல மீட்டர் துாரத்துக்கு சுழற்றி வீசியுள்ளது. அந்த அளவுக்கு, 'கஜா' புயல், கடும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.கஜா புயல், தமிழகம் மற்றும் கேரளாவை தாண்டி, அரபிக்கடலில் நுழையும். அப்போது, அரபிக்கடலில் மீண்டும் ஈரப்பதம் கூடினால், வலுவிழந்த கஜா, மீண்டும் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.இன்று, அந்தமான் மற்றும் சுமத்ரா தீவுக்கு அருகே, ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.

இது, படிப்படியாக நகர்ந்து, இலங்கை வழியாக, டெல்டா மாவட்டங்களுக்கு வரும். இது, புயலாக மாறுமா அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மழையை கொடுக்குமா என, போகப்போக தெரியும். பெரும்பாலும் புயலாக மாறி, நாகை, சென்னை இடையே கரையை கடக்கலாம். அதனால், 20ம் தேதி முதல், அதிக மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.அதேபோல, பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் இருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை, 21ம் தேதி, அந்தமான் தீவுகளுக்கு வரும். இது, கஜாவை போல், புயலாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விதிகளின் படி, இந்த புயலால், 100 கி.மீ., வேகத்தில், காற்று வீச வாய்ப்புள்ளது.

இந்த புயல், வங்க கடலின் மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழக கடல் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இது, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு, அதிக மழை தரலாம். தற்போதைய சூழலில், வடகிழக்கு பருவமழையில், எட்டு விதமான காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. ஏழு நாட்களுக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.வங்கக்கடலில், நவம்பரில் இன்னும் மூன்று; டிசம்பரில், நான்கு; ஜனவரியில் ஒரு காற்றழுத்த அமைப்பு என, மொத்தம், எட்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. இவற்றில், சில புயலாக மாறலாம்.வங்க கடலில், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அருகே, ஏற்கனவே, காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகியுள்ளதால், அங்கு ஈரப்பதம் நிலவுகிறது. எனவே, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் பெரும்பாலும், தமிழகத்தை நோக்கியே வர வாய்ப்புகள் உள்ளன.சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு வட கிழக்கு பருவமழை ஏமாற்றாது. வரும் நாட்களில் எதிர்பார்த்த மழை இருக்கும்.இவ்வாறு, செல்வகுமார் கூறினார்.சென்னைக்கு அதிக மழை வாய்ப்புவானிலை ஆர்வலர், செல்வகுமார், மேலும் கூறியதாவது:வங்க கடலின் தெற்கு பகுதியில் உருவாகும், காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற்று, நாகை மற்றும் சென்னை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. இது, கரையை கடக்கும் போது, கஜாவை விட குறைந்த வேகத்தில், மணிக்கு, 70 கி.மீ.,யில் சூறாவளி காற்று வீசும்.வரும், 20ம் தேதி முதல், இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மழை இரண்டு நாட்கள் சேர்ந்து, 25 செ.மீ., வரை கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad