வட தமிழகத்தில், 'Red Alert' வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 20, 2018

வட தமிழகத்தில், 'Red Alert' வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்



வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான், தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, நாளை (நவ.,21ம் தேதி) கடலூர் பகுதியை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக் கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.



ரெட் அலர்ட் அறிவிப்பு


கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.

சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22ம் தேதி வரை நீடிக்கும். 23ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்சராசரியாக, 850மி.மீ., மழை பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது.



கஜா தாக்கிய பகுதிகளிலும் மழை


தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும். நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுசேரியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை காற்றுவீசக்கூடும்

தமிழகத்துக்கு வடகிழக்குப்பருவமழையின் மூலம் இதுவரை 305மி.மீ., மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால், இதுவரை 243 மி.மீ., மழை மட்டுமே கிடைத்துள்ளது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad