6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை : ஜாக்டோ-ஜியோவில் இருந்து பிரிந்த சங்கத்தினர் மீண்டும் இணைந்தனர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 10, 2018

6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை : ஜாக்டோ-ஜியோவில் இருந்து பிரிந்த சங்கத்தினர் மீண்டும் இணைந்தனர்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனித் தனியாக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வந்தனர். அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் நீடித்ததால்,  கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் என 22க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஒன்றாக இணைந்து மீண்டும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை புதுப்பித்தனர்.

அதன் மூலம் அனைத்து சங்கங்களும்  ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்து களத்தில்  இறங்கினர்.  நகர, ஒன்றிய, வட்ட, மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் போராட்ட களத்தை மாற்றி அமைத்தனர். அதன் ஒரு அம்சம்தான், தொடர் வேலை நிறுத்தப்  போராட்டம். கடந்த ஆண்டில் தீவிரம் அடைந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு கலக்கம் அடைந்தது. 


வேலை நிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்த அரசு, தனது வியூகத்தை வேறு திசையில் திருப்பியது. ஒன்று பேச்சுவார்த்தை, மற்றொன்று தனியார் மூலம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு  தொடுத்தது. ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அத்துடன் ஜாக்டோ-ஜியோவிலும் பிளவு ஏற்பட்டது. 

இதையடுத்து, ஜாக்டோ-ஜியோவில் உறுதியாக நின்றவர்கள் ஒன்று திரண்டு தொடர் வேலை நிறுத்தப்  போராட்டத்தை நடத்தினர். அதன் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஜாக்டோ-ஜியோ பிளவு காரணமாக போராட்டம் கலகலத்துவிடும் என்று எதிர்பார்த்த அரசுக்கு இந்த ஆண்டு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்மட்டக் குழுவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்,  நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மீண்டும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. 

பிரிந்து சென்று சங்கங்கள் தனியாகவும், ஜாக்டோ-ஜியோ தனியாகவும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயிற்சி  எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் புதிய சம்பள உயர்வை அரசு அறிவித்தது. அதில் பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதால் சங்கங்கள் திகைத்து நின்றன.  

இந்நிலையில்தான் மீண்டும் அனைத்து சங்கத்தினரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற கருத்து உருவானது. இதையடுத்து, ஒன்றாக இணைவது குறித்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 9ம் தேதி  பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னை வேப்பேரியில் ஜாக்டோ-ஜியோ மற்றும் பிரிந்து சென்ற சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 


தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் சுப்ரமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ரெங்கராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சேகர், தமிழக ஆசிரியர்  கூட்டணியின் சார்பில் வின்சென்ட், அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் செல்வராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மகேந்திரன், தொழில் கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேரு ஆகியோர் மற்றும்  ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நேற்று காலை நடந்த பேச்சுவார்த்தையில், பிரிந்து சென்ற மேற்கண்ட சங்கங்கள் அனைத்தும் ஜாக்டோ-ஜியோவில் இணைந்ததாக  அறிவித்தனர். 

ஒன்றாக இணைந்தது மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து 15ம் தேதி முறையாக அறிவிப்பதாக தெரிவித்தனர். தற்போது இணைந்தவர்களும் ஜாக்டோ-ஜியோவில் ஒருங்கிணைப்பாளர்களாக  சேர்க்கப்பட்டனர். அதன்படி தற்போது 20 ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதுதவிர இன்னும் ஒரு சில சங்கங்களை சேர்ப்பது குறித்து 15ம் தேதி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என  ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Post Top Ad