மாநில விதிகளின்படி சி.பி.எஸ்.இ., கட்டணம் : வசூல் வேட்டை பள்ளிகளுக்கு, 'செக்' - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 23, 2018

மாநில விதிகளின்படி சி.பி.எஸ்.இ., கட்டணம் : வசூல் வேட்டை பள்ளிகளுக்கு, 'செக்'





மாநில அரசு விதிகளின் படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ.,யின் புதிய விதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரத்திற்கான, புதிய விதிகளில் கூறப்பட்டு உள்ளதாவது:

கூட்டுறவு அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் நிறுவனங்கள், வணிக ரீதியாகவோ, லாப நோக்கிலோ பள்ளிகளை நடத்தக் கூடாது. பள்ளியை நடத்துவதற்கான செலவுகள் அடிப்படையில், கட்டணம் வசூலிக்கலாம்

மாணவர் சேர்க்கைக்காக, அறக்கட்டளை மற்றும் நிறுவனம் உள்ளிட்ட எந்த பெயரிலும், நன்கொடைகள் வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கை கட்டணம் உட்பட, எந்த கட்டணமும், மாநில அரசுகளின் விதிகளின்படியே வசூலிக்கப்பட வேண்டும்

 மாணவர் யாராவது, படிப்பை பாதியில் விடுவதாக இருந்தாலோ அல்லது வேறு பள்ளிக்கு மாறுவதாக இருந்தாலோ, அந்த மாணவர் படிக்கும் காலம் வரைமட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும். மாற்று சான்றிதழ் கேட்கும் காலம் வரையோ, கல்வி ஆண்டின் இறுதிவரையிலோ, கட்டணம் வசூலிக்கக் கூடாது

மாநில அரசுகளின் சட்டம் - ஒழுங்கு முறை விதிகள் மற்றும் செயல்முறை அறிக்கைகள் அடிப்படையில், கட்டண நிர்ணயம் அமைய வேண்டும். பள்ளி மேலாண் கமிட்டியின் ஒப்புதல் அல்லது மாநில அரசின் விதிகள் அடிப்படையில் அல்லாமல், கட்டண மாற்றம் செய்ய அனுமதி இல்லை

மாநிலத்தில் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கான, கல்விக் கட்டணம் தொடர்பான விதிகள் அனைத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின்கட்டண நிர்ணயத்துக்கும் பொருந்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, தமிழக அரசு முன் வராத நிலையில், சி.பி.எஸ்.இ.,யின் புதிய விதிகள், பெற்றோருக்கு நிம்மதியை அளித்துள்ளன. இனியாவது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த, தமிழக பள்ளி கல்வித் துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post Top Ad