எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு பாடத்திட்டம் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் கல்வித்துறை அதிகாரி தகவல்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 27, 2018

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு பாடத்திட்டம் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் கல்வித்துறை அதிகாரி தகவல்!!





அரசு பள்ளிகளில் தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த மாதம் இறுதி செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை உருவாக்கி, மாநிலம் முழுவதும் அங்கன்வாடிகளில் உள்ள சுமார் 1 லட்சம் குழந்தைகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மக்களின் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் குறித்து சென்னை டி.பி.ஐ.வளாக கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:-

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டு www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கடிதம் வழியாகவோ அல்லது awpb2018@gmail.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தபால் மூலமும், மின் அஞ்சல் மூலமாகவும் இதுவரை 900-க்கு மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகளை தெரிவிப்பதற்கு இந்த மாதம் கடைசி என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி வரை பொதுமக்களின் கருத்து ஏற்கப்படும். பின்னர் இந்த பாடத்திட்டம் தொடர்பாக நவம்பர் 3-வது வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் இறுதி செய்யப்படும்.

இந்த திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்வார்கள். 2-வது கட்டமாக பள்ளிகள் அல்லாத இடங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post Top Ad