குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்குமுன் இந்த 10 விஷயங்களைக் கவனியுங்கள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 19, 2018

குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்குமுன் இந்த 10 விஷயங்களைக் கவனியுங்கள்!





பிரிக்க முடியாதது எதுவோ?' என்று திருவிளையாடல் பாணியில் கேட்டால், இன்றைய டிரெண்டிங் பதில், 'குழந்தைகளும் செல்போனும்' என்பதுதான். முன்பெல்லாம் தொலைக்காட்சித் திரையில் இருந்த குழந்தைகள், இப்போது செல்போன் திரையிலிருந்து கண்களை விலக்குவதில்லை. 6 மாதக் குழந்தை முதல் 16 வயது குழந்தைகள் வரை இந்தப் பழக்கம் அதிகரித்துவருகிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல எனப் பெற்றோருக்கு நன்றாகவே தெரிகிறது.


ஆனால், குழந்தைகளிடம் நேரிடையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால், பெற்றோர்களுக்குக் கூடுதல் பொறுப்பு வந்துள்ளது. குழந்தைகளுக்கு செல்போனைக் கொடுக்கும் முன்பு இந்த 10 விஷயங்களைக் கவனத்தில்கொள்ளுங்கள் என்கிறார், உளவியல் நிபுணர் டாக்டர் சித்ரா அரவிந்த்.

1. குழந்தைகள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதற்கு முக்கியக் காரணம், அவர்களின் தனிமை. இது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடுகிறது. அதனால், நேரடியாகப் பார்த்துப் பேசுவதைக் காட்டிலும், சமூக ஊடகங்களில் லைக் மற்றும் கமென்ட்டுகளை அதிகம் விரும்பத் தொடங்கிவிடுகின்றனர். முதல் விஷயமாக, குழந்தைகளுடன் போதுமான நேரம் மகிழ்ச்சியாகப் பேசி விளையாடுங்கள்.


2. செல்போன் வழியாகச் சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றவற்றினால் நமக்குக் கிடைக்கும் பிளஸ் மற்றும் மைனஸ்களைச் சொல்லுங்கள். அவை, அறிவுரையாக இல்லாமல், உரையாடலின் ஒரு பகுதியாகவும், சில அனுபவங்களைச் சொல்லியும் புரியவைக்கவும்.


3. செல்போனில் குழந்தைகள் என்னவெல்லாம் பார்க்கிறார்கள், எதில் அதிகம் விருப்பமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கலாம். சில 'ஆப்'கள் இதற்கு உதவும். அவற்றை இன்ஸ்டால் செய்துகொள்வது நல்லது. இது, அவர்களுக்குத் தெரியும்பட்சத்தில், நம் செயல்கள் பெற்றோர் பார்வைக்குச் செல்கிறது என்ற பயம் இருக்கும். அது நல்லதுதான்.


4. 'ப்ளூவேல்' போன்ற சில விளையாட்டுகள் மிக ஆபத்தானவை. அதுபோன்று பிரபலமாகும்போது, கூடுதல் கவனத்துடன் அவற்றைப் பற்றி எடுத்துக் கூறவும். அதேநேரம், அதன்மீது ஈர்ப்பு உண்டாக்கிவிடாமல் குழந்தைகளைக் காத்திடவும் தயாராக இருக்கவும்.

5. ஒருநாளுக்கு இவ்வளவு நிமிடங்களே செல்போனைப் பயன்படுத்தலாம் என்கிற டைம் லிமிட் அமைத்துக்கொடுங்கள். இது, உங்களின் முழு முடிவாக மட்டுமே இருக்க வேண்டாம். ஹோம் வொர்க் பண்ண இவ்வளவு நேரம், குளிக்க இவ்வளவு நேரம், வெளியில் விளையாட இவ்வளவு நேரம் என்று பிரிப்பதுபோல செல்போன் பயன்படுத்தவும் நேரத்தை இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுங்கள்.


6. தினமும் இவ்வளவு நேரம்தான் என முடிவானதும், சரியான நேரத்தில் உங்கள் குழந்தை செல்போனைத் திரும்பக் கொடுத்தால் உடனடியாகப் பாராட்டுங்கள். முன்கூட்டியே கொடுத்துவிட்டால், சின்னதாகப் பரிசு கொடுங்கள். தாமதமாகக் கொடுத்தால், உங்கள் அதிருப்தியையும் அவர்கள் மீதான நம்பிக்கையை இழந்ததையும் கவனமாக வெளிப்படுத்துங்கள்.


7. 'பக்கத்து வீட்டுப் பையனைப் பார். காலையில் சீக்கிரம் எழுந்து படிக்கிறான்' என்று ஒப்பிடக்கூடாது எனச் சொல்வதுபோன்று, மற்றவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை என்றோ, குறைவான நேரம் பயன்படுத்துகிறார் என்றோ ஒப்பிட வேண்டாம்.


8. இணையத்தில் இருக்கும் தன்னம்பிக்கை வளர்க்கும் வீடியோக்களைப் பார்க்கவைக்கலாம். அதேநேரம், அந்த வீடியோ இணைப்பின் வழியே ஆபாச வீடியோக்களுக்குச் செல்லாதிருக்கவும் கற்றுக்கொடுக்கவும்.

9. செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளை, போஸ்டராக எழுதி வீட்டின் பார்வையில் வைக்கலாம். உதாரணமாக, கண்கள் பாதிப்பதற்கான காரணங்களாக, குறைந்த ஒளியில் படிப்பது போன்ற நான்கைந்து காரணங்களுடன், செல்போன் திரையை உற்றுப்பார்ப்பதையும் எழுதிவைக்கவும். அது, உடனடியாகப் பயன் அளிக்காவிட்டாலும், ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் உதவும்.


10. கடைசிதான் மிக முக்கியமானது. பெற்றோர்களே குழந்தைகளின் ரோல்மாடல். அதனால், குழந்தைகளின் முன்னிலையில், செல்போன் பயன்படுத்துவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறையுங்கள்.


செல்போனைத் தராவிட்டால் பதற்றமாவது, மெசேஜ் டோன் வந்ததுமே என்னவென்று பார்த்தால்தான் அடுத்த வேலை ஓடும் என்றிருப்பது போன்றவை, செல்போனுக்கு ஒரு குழந்தை அடிமையாகிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள். எனவே, தகுந்த ஆலோசனைகளை நிபுணர்களிடம் பெறுவது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட. ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனிக் காரணங்கள் இருக்கும் அவற்றைக் கண்டுபிடித்து, அவர்களைப் பாதிப்பிலிருந்து மீட்க வேண்டும்.

Post Top Ad