ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து அறிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 25, 2018

ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து அறிக்கை




ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக அரசு பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்தை அதிமுக அரசு கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. மத்திய அரசு பலமுறை எச்சரித்தும், ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் இன்று வரை செயல்படுத்தாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், மாணவர்களின் கற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்குடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்படுத்தும் திட்டத்தை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் கீழ் மத்திய அரசு உருவாக்கியது. அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்களின் உள்ளடக்கத்தைக் கணினிமயமாக்கி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்குவது தான் இந்தத் திட்டமாகும். அதுமட்டுமின்றி, தலைசிறந்த ஆசிரியர்களின் விரிவுரைத் தொகுப்புகளும் செயற்கைக் கோள் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகளில் பயிற்றுவிப்பதும் இத்திட்டத்தில் சாத்தியமாகும்.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான இத்திட்டம் கடந்த 2011-12 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 7 ஆண்டுகளாகியும் தமிழக அரசு பள்ளிகளில் இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தில்லியில் கடந்த மே 17-ஆம் தேதி நடைபெற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறையின் திட்ட அனுமதி வாரியக்கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்ட 5265 பள்ளிகளில் 4340 பள்ளிகளில் இன்னும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படாதது ஏன்? என்று கேட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை கடந்த ஜனவரி இரண்டாம் தேதியே பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வி செயலர் பிரதீப் யாதவ், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு இயக்குனர் அறிவொளி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் இயக்குனர் இராமேஸ்வர முருகன் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

ஆனால், அதை ஏற்காத மத்திய அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. ஏற்கனவே 2015-16 ஆம் ஆண்டிலும் இதேபோன்று தமிழகம் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இது தமிழகத்திற்கு பெரிய அவமானம்; இதற்காக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை செயல்படுத்துவது கடினமான ஒன்றல்ல. மாறாக, கல்வி வளர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இல்லாததும், மாணவர்களின் நலனுக்கான இந்தத் திட்டத்தில் கூட ஊழல் செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடித்ததும் தான் இதற்கு காரணமாகும். 2011-12 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.23.41 கோடி, மாநில அரசின் சார்பில் ரூ.7.80 கோடி என மொத்தம் ரூ.31.21 கோடி ஒதுக்கப்பட்டது.

ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்திற்காக இதுவரை மொத்தம் 5 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 25% கையூட்டாக தர வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அஞ்சி முதல் 3 ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் இருந்தபோது, நான்காவது முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அப்போது ஒப்பந்தப்புள்ளி நடைமுறை நியாயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்றன. இப்போது ஐந்தாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பேரம் படியாத பட்சத்தில் இப்போதும் ஸ்மார்ட் வகுப்புத் திட்டம் நடைமுறைக்கு வருவது ஐயம் தான்.

தமிழக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்த புதிதில் 26.08.2011 அன்றே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின் அதே திட்டத்தை 19.06.2017 அன்று புதிய திட்டம் போன்று இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஜெயலலிதாவில் தொடங்கி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என 3 முதல்வர்களையும், சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். சிவபதி, வைகைச்செல்வன், பி.பழனியப்பன், கே.சி வீரமணி, பி.பெஞ்சமின், மாஃபாய் கே. பாண்டியராஜன், கே.ஏ.செங்கோட்டையன் என 9 அமைச்சர்களையும் ஸ்மார்ட் வகுப்புத் திட்டம் சந்தித்து விட்டது. ஆனாலும் இன்னும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

Post Top Ad