வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, September 27, 2018

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு



வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் மற்றும் லட்சுமிபுரம் நடுநிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களான சி.சிவபாக்கியம், எம்.முத்துமீனா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தேர்தல் பணி மட்டுமின்றி, வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு, திருத்தம் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளவும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வாக்குச்சாவடி மைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு அவர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன.

பள்ளி வேலை நேரத்துக்குப் பிறகு கூடுதல் பணியாக இவற்றை ஆசிரியர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பணிகளுக்காக பெரும்பாலும் பெண் ஆசிரியைகளே ஈடுபடுத்தப்படுகின்றனர்.


குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர் ஆயிரம் வீடுகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் பணியில் பாதிப்பு ஏற்படுவதுடன், நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரமும் கேள்விக்குறியாகி உள்ளது.


அரசின் பிற துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கோ, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கோ இதுபோன்ற தேர்தல் பணிகள் வழங்கப்படுவதில்லை.

வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்காக பணியாளர்களை நியமிக்காமல், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பணிகளை கூடுதல் சுமையாக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் கொடுத்து வருகிறது. எனவே, இதுபோன்ற பணிகளுக்கு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்

Post Top Ad