அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 22, 2018

அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம்


நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் வழக்கு தாக்கல் செய்த  அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 2005ல்  பிளஸ் 2 தேர்வில், 998 மதிப்பெண்கள் பெற்றார். பின்,  வீரச்சிபாளையத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்து படித்தார்.

முதலாம் ஆண்டு படிப்பை முடித்த நிலையில்,  சான்றிதழ் சரிபார்ப்பின்போது, ராஜேஸ்வரி சமர்ப்பித்த பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் பாடவாரியாக உள்ள மதிப்பெண்களுக்கும், மொத்த மதிப்பெண்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக பொது தேர்வுத் துறை இணை இயக்குநர் அறிக்கை அளித்தார். 

அதன் அடிப்படையில், ராஜேஸ்வரியை பள்ளியில் இருந்து நீக்கி, பள்ளி நிர்வாகம் 2007ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து  ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவியை பள்ளியில் இருந்து நீக்கிய உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. மேலும் பிளஸ்2 புதிய மதிப்பெண் சான்றிதழை வழங்கவும், தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி, பள்ளியில் மீண்டும் சேர்ந்த ராஜேஸ்வரி, இரண்டாம் ஆண்டு படிப்பை முடித்தார். ஆனால் அவரது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.இதையடுத்து, சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ராஜேஸ்வரியின் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அவரது சான்றிதழ்களை வழங்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தேர்வுத்துறை இயக்குநருக்கு 2010ல் உத்தரவிட்டது. நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில்  வழக்கு தாக்கல் செய்த தேர்வுத்துறை இயக்குநருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக மாணவிக்கு வழங்கவும் (அபராதம்)  நீதிபதி உத்தரவிட்டார்.

Post Top Ad