கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் , ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 22, 2018

கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் , ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்!!!




நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதே இதற்கு காரணம் என்றும், அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும், தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக மையம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வி உரிமை சட்டப்படி, அரசு பள்ளிகளில், 6 - 8 வரையுள்ள வகுப்புகளில், ஆசிரியர்கள், ஒரு ஆண்டுக்கு, 220 நாட்கள், கல்வி போதிக்க வேண்டும். ஆனால், 2015 - 16ம் ஆண்டில், 42 நாட்கள் மட்டுமே, கல்வி போதிக்கப்பட்டுள்ளது; இது, மொத்த கல்வி நாட்களில், 19 சதவீதம் மட்டுமே.

மீதமுள்ள நாட்களில், தேர்தல் பணி, அரசுக்கு தேவையான ஆய்வுகளை நடத்துதல், போலியோ சொட்டு மருந்து முகாம், மதிய உணவு திட்டத்துக்கான பதிவேடுகளை பராமரித்தல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் செய்ய வேண்டி உள்ளது.

அரசு ஆசிரியர்களின் பணி நேரத்தில், 81 சதவீதம், பிற பணிகளுக்காக செலவிடப்படுகிறது. இதில், 42.6 சதவீதம், தேர்தல் பணி போன்ற, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது. 31.8 சதவீத நேரம், பள்ளி சார்ந்த, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது.

தேர்தல் சார்ந்த பணிகளில், ஆசிரியர்கள் பெருவாரியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளை விட, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அதிக நேரம், கல்வி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது.

Post Top Ad