தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு - இந்த மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 18, 2018

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு - இந்த மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும்.


314 முதல் 4,500 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் 
* 18 லட்சம் பேர் பயனடைவார்கள் 
* ஜுலை 1 முன் தேதியிட்டு அமல்

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 7  சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர்  எடப்பாடி அறிவித்தார். இதனால், அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500  வரை ஊதிய உயர்வு கிடைக்கும். 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழக அரசு, 7வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த முடிவுகளை ஆராய்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஆகியவற்றை உயர்த்தி வழங்க அமைக்கப்பட்ட அலுவலர் குழு, 2017’’ன் பரிந்துரைகள் அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1-10-2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது 1-1-2016 முதல் திருத்திய ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர்களுக்கு 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக அகவிலைப்படி 2% உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக இரண்டு சதவீதம் அளித்து, தற்பொழுதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புக்களின் அலுவலர்களுக்கும், 

பல்கலைக்கழக மானியக்குழு / அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் / உடற்பயிற்சி இயக்குநர்கள் / நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படும் இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். 

சிறப்பு ஊதிய அட்டவணையில் ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய் துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் / எழுத்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும். 

இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜூலை 2018 முதல், ஆகஸ்டு 2018 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், இந்த மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,157 கோடியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Post Top Ad