இனி 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் கிடையாது.! தமிழக அரசு அதிரடி.!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 21, 2018

இனி 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் கிடையாது.! தமிழக அரசு அதிரடி.!!




கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கொண்டுவந்தது மாணவர்களுக்கு சுமையானாலும், இது கற்றல் திறமையை அதிகரிக்கும் என்பதால், இது அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பை பெற்றது.

மேலும், கடந்த கல்வியாண்டு முதல் தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டுவரப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு புதிய வண்ணங்களில் சீருடை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. முன்னதாக இருந்த 11 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்களையும் சேர்த்து 1200 மதிப்பெண்களாக வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக 12 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்கள் மட்டுமே இனி எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தற்போது தமிழக பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:-

''அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது போல், '10, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்.

இதனையடுத்து, செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு நாள் அறிவிக்கப்பட்ட பின், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும்' என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.

இதனை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து, வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என்று அரசு ஆணையிடுகிறது'' என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெற்று வந்த துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தினால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டுமே எழுதமுடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

Post Top Ad