'ப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி? : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 19, 2018

'ப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி? : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை

வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' இல்லாமல், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, 'மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக பள்ளி கல்வித்துறையில், புதிய திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழக பாடத்திட்ட மாற்றம், தனியார் பள்ளிகளுக்கான நிர்வாக மாற்றம், பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு என, புதிய மாற்றங்கள் அமலாகிஉள்ளன. இந்நிலையில், பொதுத் தேர்வுகளிலும் மாற்றங்கள் அமலுக்கு வந்து உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், மாணவர்களுக்கு, 'ப்ளூ பிரின்ட்' என்ற, வினாத்தாள் கட்டமைப்பு இல்லாமல், புதிய கேள்விகள் வடிவமைக்கப் பட்டன. 

மேலும், மாதிரி வினாத்தாள் அல்லது வினாத் தாளின் அமைப்பு குறித்த, முன் அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. இதனால், பிளஸ் 1 தேர்வில், மதிப்பெண் பெறுவதில், மாணவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.இந்த ஆண்டு, பிளஸ் 1க்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிஉள்ளது. பிளஸ் 2க்கு, இந்த ஆண்டுடன் பழைய பாடத்திட்டம் முடிவுக்கு வருகிறது.


அதேநேரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளுக்கும், இந்த ஆண்டு, ப்ளூ பிரின்ட் இன்றி, வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய, தேர்வுத்துறை அறிவுறுத்திஉள்ளது.

இந்நிலையில், ப்ளூ பிரின்ட் இல்லாமல், தேர்வு நடக்க உள்ளதால், எந்த மாதிரியான வினாக்கள் இடம் பெறும். வினாக்களின் வகை என்ன; சிந்தனை திறன் கேள்விகள் எப்படி இருக்கும்; ஒரு மதிப்பெண் கேள்விகள் எந்த மாதிரி இருக்கும் என்பதை, மாதிரி வினாத்தாளாக வெளியிட, தேர்வுத்துறைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கு முன் மாதிரியாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, மாதிரி வினாத்தாள்களை வெளியிடுகிறது.- நமது நிருபர் -

Post Top Ad