அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..!’’ விவாதப்பொருளாகும் உதயசந்திரன் மாற்றம் - விகடன் நாளிதழ் செய்தி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 31, 2018

அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி..!’’ விவாதப்பொருளாகும் உதயசந்திரன் மாற்றம் - விகடன் நாளிதழ் செய்தி





‘‘பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் மற்ற மாநிலங்களும் மத்திய அரசும் நம் மாநிலத்துக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. கல்வி ஒன்றுதான் அடுத்த தலைமுறையினருக்குச் சிறந்த சேவையைச் செய்திட முடியும்’’ என்று பூரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். ஆனால், அவரின் செயல்பாடுகள் அப்படி இல்லை என்று கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் வருத்தப்படுகிறார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபோது, ‘நீட் தேர்வு’ உட்பட பல்வேறு பிரச்னைகளில் கல்வித்துறை தத்தளித்துக்கொண்டு இருந்தது. இதற்கெல்லாம், தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே, அத்துறையின் செயலாளராக உதயசந்திரன் கொண்டு வரப்பட்டார். எதிர்பார்த்தது போலவே, ‘பாடப்புத்தகங்களைப் புதுமைப்படுத்துதல், 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் ரேங்க் முறை ரத்து, ப்ளஸ் ஒன்-னுக்கும் பொதுத்தேர்வு, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடங்கள்’ என்று தமிழகத்தின் பள்ளிக்கல்வி வரலாற்றையே மாற்றி அமைக்கும் அதிரடிச் சீர்திருத்தங்களைச் செய்தார்.


பாடத்திட்டங்களைப் புதுமைப்படுத்த, ‘உயர் மட்டக்குழு, கலைத் திட்டக்குழு’ ஆகியவற்றை செங்கோட்டையனின் வழிகாட்டுதல்படி செய்தார். இந்த நிலையில் ஐந்தே மாதங்களில், உதயசந்திரனைப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றும் வேலைகள் நடந்தன. அப்போது, காஞ்சிபுரம் ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உதயசந்திரனை, ‘துறை’ மாற்றுவதற்குத் தடை ஆணைப் பெற்றார். ஓராண்டு கழித்து இப்போது, அவர் `தொல்லியல் துறை'க்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு மீண்டும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

சமூக செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகையில், ``தற்போது, நடுவழியில் கப்பலைக் கவிழ்த்து விடுவதுபோல, உதயசந்திரனைத் தொல்லியல் துறைக்கு மாற்றி இருக்கிறார்கள். இதனால், இப்போது நடந்துகொண்டிருக்கும் பாடத்திட்டம் புதுமையாக்கல் செயல்பாடுகள் முடங்கும். தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் இருளில் தள்ளப்படும். இதுபோன்ற அதிகாரிகளுக்கு, கூடுதல் ஆதரவு கொடுத்து, பணிகளை முடிக்க, அமைச்சரும், அரசும் உதவ வேண்டும். யாரையாவது திருப்திப்படுத்த உதயசந்திரனை மாற்றுவது, மாணவர்களுக்குச் செய்யும் துரோகம்’’ என்றார்.

‘நீட் தேர்வு வேண்டாம்’ என்று  உச்ச நீதிமன்றத்தில் முதல் முதலில் வழக்கு தொடுத்த காஞ்சிபுரம் இளங்கோ, ``மாநிலப் பாடத் திட்டம் அகில இந்திய அளவில் போட்டி போடும் தரத்தில் இல்லை என்றுதான் நீட் தேர்வு வேண்டாம் என நீதிமன்றம் சென்றோம். இப்போது புதுப் புத்தகம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அக் குழுவின் செயலாளரை மாற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைவிட உயர்வாகத் தயாரித்து வருகிறார்கள். புதிய புத்தகத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களும் பாராட்டுகிறார்கள். புதிய பாடத்திட்டங்களுக்கு முழுமையான செயல்வடிவம் கொடுக்க, உதயசந்திரனுக்கு வாய்ப்பு தர வேண்டும். அனைத்துப் பாடங்களையும் அவரின் கண்காணிப்பில் முடிக்கும் போதுதான் திட்டமிட்ட இலக்கை அடைய முடியும். இந்த மாற்றத்தால் அவர்கள் காட்டில் மழை... மாணவர்கள் தலையில் இடி’’ என்றார்.
புதிய பாடத்திட்டக்குழுத் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன், ``பாடப்புத்தகம் புதுப்பித்தல் தொடர்பாக அடுத்த வாரம் கூட்டம் ஒன்றை வைத்துள்ளோம். இப்போது, அந்தப் பிரச்னை சென்சிட்டிவ் (sensitive) ஆக இருப்பதால் அதுபற்றி பேச வேண்டாம்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பாடத்திட்டக்குழு உறுப்பினரும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி, ``பாடத்திட்டப் பணிகளில் மூன்றில் ஒரு பங்கு வேலைகள் முடிந்துள்ளன. இன்னும், இரண்டு பங்கு வேலைகள் முடிக்கப்பட வேண்டியிருக்கிறது. வகுப்புவாரியாக ஒவ்வொரு பாடத்துக்கும் வைக்க வேண்டிய பாடத்திட்டம் என்னென்ன என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அந்தந்தப் பாடத்தை எழுதத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, உதயசந்திரனை மாற்றுவதால் பாடத்திட்டம் புதுப்பிக்கும் பணிகள் முற்றிலும் முடங்கும் என்று சொல்லிவிட முடியாது’’ என்று விவரித்தார்.

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் (பாடத்திட்டம்) என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணைப் பெற்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ``உதயசந்திரனை மாற்றக்கூடாது என்று ராமலிங்கம் தொடுத்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு, சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்குடன் தங்களது பணிகளைத் தொடங்கிவிட்டது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள பள்ளிக்கல்வித் துறைச் செயலர் உதயசந்திரனை பணிமாற்றம் செய்யவோ அல்லது அக்குழுவில் உள்ள பிற நபர்களின் பெயர்களை நீ்க்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இந்தப் பணிகள் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தர வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். கடந்த 24.8.2017 அன்று உதயசந்திரன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் (பாடத்திட்டம் - curriculum) என்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி உதயசந்திரனைத் தொல்லியல் துறைக்கு மாற்றிவிட்டார்கள். இது, நீதிமன்ற அவமதிப்பு. இப்போது, 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் தயாராகி உள்ளது. மற்ற வகுப்புகளுக்குப் பாடம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. எனவே, உதயசந்திரனை மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் செல்வோம்’’ என்றார்.
தொல்லியல் துறைக்கு மாறுதல் ஆணை வந்ததற்குப் பிறகு, சென்னை லயோலா கல்லூரியில், ‘குழந்தைகள் அமைப்புகள்’ நடத்திய கருத்தரங்கில் உதயசந்திரன் பேசினார். அப்போது, ``மாணவர்களுக்குச் சமூகப் பிரச்னைகளை மட்டும் சொல்லாமல், அதற்கான தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்கத்துடன் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மனப்பாடத்தைவிடப் புரிதல் மிக முக்கியம் என்பதை மையப்படுத்தி ஒவ்வொரு பாடத்திலும் கவனம் செலுத்தி இருக்கிறோம்’’ என்று பேசினார்.

ஒருமுறை உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் விகடனுக்குப் பேட்டியளித்தபோது ஒரு விஷயத்தைத் தீர்க்கமாக முன்வைத்தார். ``இன்னும் ஐந்து வருடங்களில் பாருங்கள் நம் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை அநாயாசமாக எதிர்கொள்வார்கள். புதிய புத்தகங்கள் எனும் வலுவான ஆயுதம் அவர்களின் கைகளில் இருக்கும்", என்றார் நம்பிக்கையுடன். ஆணி வேராக இயங்கிக்கொண்டிருந்த அந்த நம்பிக்கை விதையைத்தான் தற்போது பிடுங்கி எறிந்திருக்கிறார்கள். ஆனால், வீசப்பட்ட இடத்தில் விதை முளைக்கத்தானே செய்யும்!

Post Top Ad