"அனைவருக்கும் பாஸ் திட்டம்" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, August 19, 2018

"அனைவருக்கும் பாஸ் திட்டம்" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்



மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தேர்வில்  பெயில் செய்ய முடியாது. ஆனால், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மேல்நிலை கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கவும் இந்த ஷரத்தை நீக்க  தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் மாணவர்களை பெயில் ஆக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்வில்  தோல்வியடையும் மாணவன் 2 மாத பயிற்சி பெற்று உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 


இச்சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எக்காரணம் கொண்டும் மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என கல்வி  பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை பெயில் ஆக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்திருத்தம் உள்ளது. இதை, தமிழக அரசு  ஏற்கக்கூடாது. இது பள்ளி மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுத்துவிடும். 

தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளின் இறுதியில் தேர்வுகள் நடத்தி  மாணவரது கற்றல் திறனை காண வழி செய்யும் கல்வி உரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணவர் தேர்ச்சி  பெற தவறினால் இரண்டு மாத தனிப்பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும், இதன்மூலம் மாணவர்களை தக்கவைப்பது பற்றி முடிவு  செய்யலாம் என்றும் மசோதா கூறுகிறது.

 இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால்,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மற்றும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள்  அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். கற்றல் குறையுடைய மாணவர்களை கண்டறிந்து தக்க பயிற்சி கொடுத்து தேர்ச்சி பெற வைப்பது ஆசிரியர்களின்  கடமை. 

இதற்காக மாணவர்களை தோல்வியடைய செய்து தண்டிப்பது தவறான அணுகுமுறை ஆகும். எனவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி,  தமிழக அரசு இந்த சட்டத்திருத்தத்தை ஏற்கக்கூடாது.
இவ்வாறு நடராஜ் கூறினார்.

Post Top Ad