72-வது சுதந்திர தின சிறப்புப் பதிவு; கல்வி உரிமையில் நாம் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 14, 2018

72-வது சுதந்திர தின சிறப்புப் பதிவு; கல்வி உரிமையில் நாம் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?


இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் கல்வி உரிமையில் இந்தியா கடந்து வந்ததில் சாதித்தது என்ன, சறுக்கியது என்ன என்று பார்க்கலாம்.

குருகுலக் கல்வி

சுதந்திரத்துக்கு முன்பு 1857-ம் ஆண்டு கொல்கத்தா, மும்பை, சென்னை என மூன்று இடங்களில்தான் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே உயர் கல்வி படிக்க முடியும் என்ற சூழலும் அப்போது இருந்தது. சுதந்திரத்துக்கு முன்பு கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக்  குறைவாகத்தான் இருந்தது. கல்வி நிறுவனங்களும் குறைவாகவே இருந்தன. அந்தக் கால கட்டத்தில்  'குருகுலக் கல்வி' முறைதான் இருந்தது.

மதிய உணவுத்திட்டம்

சுதந்திரத்துக்குப் பின்னர்தான், மத்திய அரசில்  கல்வித்துறை என்பது உருவாக்கப்பட்டது. பின்னர் இது மனித வள மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்பட்டது. அதேபோல் மாநிலங்களில் கல்வித்துறை தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்று சில ஆண்டுகள் கடந்த பின்னும் கூட, உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே படிப்பதற்கு முன் வந்தனர். கீழ் தட்டு மக்கள், சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் எந்தவித கல்வி கற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தனர்.


வறுமை காரணமாக மக்கள் தங்களின் பசியைப் போக்கவே வழி இல்லாத சூழலில் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் அக்கறை காட்டவில்லை. தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர்தான் தமிழகத்தில் கல்வி பயில்வோரின் எண்ணிக்கைக் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. இதை இன்றளவும் 'கல்வி புரட்சி' என்று சொல்கிறோம். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இப்போது மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தமிழகம்தான் முன்னோடியாக இருந்தது.  

வேலைக்கான கல்வி

அனந்த நாராயணன் இந்தியாவின் கல்விச் சூழல் குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனிடம் கேட்டோம். "சுதந்திரத்துக்கு பின்னர், கல்வி நிறுவனங்கள் அதிகமாகத் தொடங்கப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்துக்கு முன்பு நாடு முழுவதும் 46 பல்கலைக்கழகங்கள் இருந்தன. இப்போது 660 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆரம்பப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் என்று பள்ளிகள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன.

ஐ.ஐ.டி உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்லூரிகள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம், கல்வி என்பது போதுமான அளவுக்குத் தரமானதாக இல்லை. நாட்டினுடைய முன்னேற்றத்துக்கான, தொழில் வளர்ச்சிக்கான, சமூக வளர்ச்சிக்கான கல்வியாக இல்லை.  வேலைதேடுவதற்கான, சம்பளத்துக்கான கல்வியாகத்தான் இப்போது  இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உரியதாக கல்வி முறை இல்லை. கல்வி நிலையங்களுக்கும் தொழில்நிலையங்களுக்கும் இடையே ஒரு இணக்கமான தொடர்பு ஏற்பட வேண்டும் என்று சுதந்திரத்துக்கு முன்பு கல்வியாளர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்தனர்.


சமூகத்தில் பின்தங்கியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு முறையில் அதிக அளவுக்குக் கல்வி வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. பெண்களுக்கும் அதிகக் கல்வி வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.  சுதந்திரத்துக்குப் பின்னர், நாம் எதிர்பார்க்காத  ஒன்றும் நடந்துள்ளது. கல்வியில் தனியார் ஈடுபடுவது என்பது விரும்பத்தகாத ஒன்று. தனியார் கல்வி நிறுவனங்களில் ஒரு சில கல்வி அமைப்புகள் தவிர, மற்ற கல்வி நிறுவனங்கள் எல்லாம் கொள்ளையடிக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. இத்தகைய நடைமுறைப் பிற்காலத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

நாட்டில் லஞ்சம் நிலவுவதற்கு கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பதுதான் முக்கிய காரணம். இதில் நன்னடத்தை என்பது இல்லாமல் போய்விட்டது. தனியார் கல்லூரிகளில் 60 லட்சம் ரூபாய் கொடுத்து எம்.பி.பி.எஸ் சீட் வாங்க வேண்டி இருக்கிறது. இது போன்ற கல்லூரிகளில் படித்தவர்கள் மருத்துவர்களாக வரும்போது மக்களிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வாங்கலாம் என்ற நிலை இருக்கிறது" என்றார்.  

இலவசக் கட்டாயக் கல்வி

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம்  பேசினோம். "விடுதலை கிடைப்பதற்கு முன்புபிரின்ஸ் கஜேந்திரபாபு  1911-ம் ஆண்டு மும்பை மாகாணத்தில் கோபாலகிருஷ்ண கோகலே கட்டணமில்லா கல்வி உரிமைச் சட்டம் முன் மொழிந்தார். எல்லோரும் படிக்க வந்தால் கூலிக்கு யார் வருவார்கள் என்று சொல்லி இந்த சட்டத்தைத் தோற்கடித்தனர்.

அதன்பின்னர் வார்த்தா-வில் 1938-ம் ஆண்டு மகாத்மா  காந்தி கல்வி மாநாடு ஒன்றை நடத்தினார். அதில், 'குறைந்தது ஏழு ஆண்டுகளுக்காகவது கட்டணம் இல்லா கட்டாய கல்வியை தாய் மொழியில் அரசாங்கம் வழங்க வேண்டும்' என்று கூறினார்.  அரசயலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, எவற்றையெல்லாம் அடிப்படை உரிமையாக வைக்கலாம் என்று ஆலோசித்தனர். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு  கட்டணம் இல்லா கட்டாயக் கல்வியைக் கொடுப்பது அரசின் கடைமை, மக்களின் உரிமை என்று கூறினார்கள்.


ஆனால், பட்டேல் தலைமையிலான உரிமைக் குழு, நாட்டின் பொருளாதாரம், இலவச கல்வி வாய்ப்பை அளிக்கும் வகையில் இல்லை என்று கூறியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 41-ல் அரசின் பொருளாதார நிலை உயருமானால், அரசு கல்வி உரிமையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அரசு விரும்புவது

நாடு விடுதலை பெற்றபிறகு, கோத்தாரி குழு, பள்ளிக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை ஆய்வு செய்தது. அரசு தமது முழு பொறுப்பில், முழு செலவில் பொதுப்பள்ளிகள் மூலம் தாய்மொழி வழியில் கல்வி அளிக்கவேண்டும் என்று பரிந்துரைகள் அளித்தது. ஆங்கில வழி கல்வி தர வேண்டும், தனியார் பள்ளிகள்  மூலம் கல்வி அளிக்க வேண்டும் என்பதைத்தான் அரசு விரும்புகிறது. வசதி இல்லை என்றால் அரசுப் பள்ளிகளுக்குப் போகலாம். குறைவான வசதி கொண்டவர்கள், அதற்கு ஏற்ற கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கலாம் என்ற சூழல் உள்ளது.

இந்தியாவின் தோல்வி

இவையெல்லாம் நமது விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளின் கனவுகளுக்கு எதிரானது. எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்றுதான் பகத்சிங் தூக்கில் தொங்கினார். விடுதலைக்குப் பின்னர், இன்றைய தேதிவரை எல்லோருக்கும் சமமான கல்வி வாய்ப்பை அரசாங்கங்களால் உருவாக்கித்தர முடியவில்லை. இதை இந்தியாவின் தோல்வியாகக் கருதவேண்டும். உலகத்தில் விடுதலை அடைந்ததன் வெளிப்பாடு என்னவென்று கேட்டால், கற்றலைப் பரவலாக்கி, அதை மக்களாட்சியின் அடையாளம் ஆக்க வேண்டும். இதில் இந்தியா மட்டும்தான் விதிவிலக்காக இருக்கிறது" என்றார்.

Post Top Ad